மொகாலி

ன்று மொகாலியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி  நடைபெற உள்ளது.

இந்தியாவில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று  நடக்கிறது.

அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் கால் பதிக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் உலகக் கோப்பை போட்டி பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அணித்தலைவர் பொறுப்பை லோகேஷ் ராகுல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணியில் அணித்தலைவர் ரோகித் சர்மா இடம் பெறாததால் தொடக்க வீரராக இஷான் கிஷன், சுப்மன் கில்லுடன் களம் காணுவார் என்று தெரிகிறது.

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி ஆமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரங்கேறும் இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இது உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக தங்களது அணியின் கலவையைக் கடைசியாகச் சோதித்து பார்த்து தவறுகளைக் களைந்து வலுவாகச் சீரமைக்க நல்லதொரு வாய்ப்பாகும்.