திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம்
“அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று.
கிருபானந்தவாரியார்
ஆகஸ்டு 25, 1906ம் வருடம் பிறந்த வாரியார்  சிறந்த முருக  பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம் மட்டுமின்றி  பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளும், 150க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார்.
உலக வரலாற்றில் இன்று :
உருகுவே விடுதலை தினம்(1825)
பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)