மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இங்கு 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர். அவர்களிடம் வனத்துறையினர் சிசிடிவி காமிரா மூலம் சிறுத்தையைக் கண்காணிப்பதாக உறுதி அளித்தும் இன்று அதிகாலை அங்கு வந்த சிறுத்தை ஒரு பன்றியைக் கடித்துள்ளதால் அங்குக் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்குப் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிக்கு இன்று(ஏப்ரல் 4) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் விரைவில் சிறுத்தையைப் பிடித்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.