ராஞ்சி

இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) கூட்டணி வைத்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 47 இடங்களை வென்றது.  இதில் ஜேஎம்எம் 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி ஒரு இடத்தையும் வென்றுள்ளன.

கடந்த 22 ஆம் தேதி,  கூட்டணியின் தலைமைக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஆளுநர் துரவுபதி முர்முவை ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் தனக்கு 50  சட்டமன்ற உறுப்பினர்களின். ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

அதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் துரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ராஜ்பவனில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி உட்பட 30 தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவுக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளனர்.