டெல்லி

ன்று 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.

மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரதமாராக பதவியேற்றார். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற உள்ள மக்களவைக் கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் நீட் தேர்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தை பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விலைவாசி உயர்வு,  உணவுப் பற்றாக்குறை , வரலாறு காணாத வெப்பச் சலனம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், தேர்வுகளை நடத்துவதில் சமீபத்திய முறைகேடுகள் போன்ற பல பிரச்சனைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.