தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாகக் கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதில் இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதையொட்டி அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து இரவு தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். இன்று சிந்தலக்கரை பிரசாரத்தை முடித்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டுச் செல்கிறார்.

இதைப் போல தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று  மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு ஒரே நாளில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.