டில்லி
இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.
தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.என அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீர் வழங்கும் தவணை காலம் ஜூன் மாதம் துவங்கியது. ஆயினும், கர்நாடக அரசு முறைப்படி நீரை வழங்கவில்லை. இன்னும் 28.7 டி.எம்.சி. நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து, முறையிடப்பட்டபோது, மழை வந்தால் தருவதாகக் கர்நாடக அதிகாரிகள் கூறியிருந்தனர். இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடக்கிறது. கடந்த ஓராண்டாகக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் காணொலி காட்சி மூலம் நடந்து வந்தது. இன்று அந்தக் கூட்டம் நேரடியாக நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு, தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழுவினர் டெல்லியில் முகாம் இட்டுள்ளனர். இன்று காவிரி ஆணைய கூட்டத்தில் இன்று எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று கூறப்படுகிறது.