திருத்தணி

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் தொலை நோக்குப்பார்வையில் இந்தியாவிலேயே முதல் முறையாகக் கருணாநிதியின் ஆட்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது.  தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்களில் சுமார் 1 கோடியே 6 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழு உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு இதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகை செய்யப்பட்டு வருகிறது.   இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காக  ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதுவரை அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மேலும் ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14-ந்தேதி) தொடங்கிவைக்கிறார்.

இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்-அமைச்சர் கடனுதவி வழங்குகிறார்   விழாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஸ்டாலின் கடனுதவி வழங்க இருக்கிறார். தவிர பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து,  பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.