சென்னை
இன்று சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முத்ல்வ்ர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டி ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பன்னோக்கு மருத்துவமனை மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 3-ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைத்துத் திறக்க திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஜனாதிபதி செர்பிய நாட்டிற்குச் சென்றதால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
பிறகு ஜூன் 15ஆம் தேதி அன்று, ஜனாதிபதியின் தேதியைப் பெற்று மருத்துவமனையைத் திறக்க அரசு சார்பில் முயற்சி செய்யப்பட்டன., ஜனாதிபதி மாளிகையிலிருந்து இதுவரை மருத்துவமனை திறக்கும் நிகழ்ச்சிக்கு தேதி ஒதுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியானது. எனவே, சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இந்த திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன..