பாட்னா
இன்று காலை பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள பீகார் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராகலாம் எனத் தெரிவிக்கிறது. அவ்வாறு அவர் முதல்வரானால் மிக இளைய முதல்வர் என்னும் பெருமையை அடைவார். பீகாரில் நான்காம் முறையாக முதல்வராக நிதிஷ்குமார் களத்தில் இறங்கி உள்ளார்.
கொரோனா பரவலுக்கு பிறகு நடக்கும் பொதுத் தேர்தல் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்தது. பரப்புரை கூட்டங்களில் இரு தரப்பிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இளைஞர்களைக் குறி வைத்து தேஜஸ்வி யாதவ் 10 லட்சம் வேலைகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதற்குப் போட்டியாக 15 லட்சம் வேலைகள் அளிப்பதாக ஆளும் கட்சி வாக்குறுதி அளித்தது.
பாஜக இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. அதைவிடத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி அளிப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பீகாரில் ஜாதி வாரியாக வாக்குகள் பிரியவும் வாய்ப்பு உள்ளது.
பீகார் மாநிலத்தின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவ் தற்போது சிறையில் உள்ளார். மற்றொரு மூத்த தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் அண்மையில் மரணம் அடைந்ததால் இருவரின் பங்களிப்பும் இல்லாமல் இந்த தேர்தல் நடந்துள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வான் கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீடு காரணமாகத் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். அவருடைய கட்சி தனித்துப் போட்டியிடுவதால் அது ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்குப் பாதிப்பை அளிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்று விடை கிடைக்கும்.