காஞ்சிபுரம்:

நாளை முதல் காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளதால், இன்று பொதுமக்கள் தரிசனம் பகல் 12 மணியுடன் முடிவடைவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அத்திவரதர், கடந்த 1ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். தற்போது சயனக்கோலத்தில் ஆசி வழங்கும் அத்திவரதர் நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.

இதையடுத்து,  இன்று அத்திவரதர் பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணியோடு மூடப்படுகிறது. அதற்கு முன்னதாக கோயில் வளாகத்தில் இருக்கும் பக்தர்கள் அனைவரும்,  மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.  அதுபோல விஐபி வரிசையில் வரும் பக்தர்கள் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அதன்பிறகு, அத்திவரதர் சிலையை நிற்க வைக்கும் வகையில் தேவையான  பணிகள் நடைபெற உள்ளதால், இன்று பகல் 12 மணி உடன் நுழைவு வாயில் அடைக்கப்படுகிறது.

நாளை முதல் ஆக-17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.