நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக  இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணி  நடந்து வந்தது.

இந்த கப்பல் கொச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக நேற்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு வந்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்குத் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

இன்றும் நாளை இந்த பயணிகள் கப்பல்  நாகபட்டினத்தில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகபட்டினத்துக்கும் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற வரும் 10-ந்தேதி முதல் நாகபட்டினத்தில் இருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.

இக்கப்பலில் பயணிகள் 50 கிேலா எடை வரையில் எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம். மேலும் இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ-விசா கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அந்த சேவை நிறுத்தப்படுகிறது.

பிறகு வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு மீண்டும் ஜனவரி மாதம் முதல் இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாள்தோறும் நடக்கும் என்று நாகப்பட்டினம் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.