இன்று தமிழகத்தில் 3 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Must read

சென்னை

மிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருகிறது.   தற்போது தினசரி பாதிப்பு 1700 ஐ தாண்டி உள்ளது.  மேலும் விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இதையொட்டி தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரமாக்கி உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் காலை முதல் தொடங்கி உள்ளன.  ஏற்கனவே முதல் கட்ட முகாமில் 28 லட்சம் பேருக்கும் இரண்டாம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இன்று காலை தொடங்கி உள்ள 3 ஆம் கட்ட மெகா  முகாம் இன்று மாலை 7 மணி வரை நடைபெற உள்ளன.   தமிழகம் முழுவதும் சுமார் 20000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று சுமார் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் 1600 முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசிடம், தற்போது 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.  எனவே இன்று இரவு 7 மணி வரை முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இன்று மெகா முகாம் நடைபெறுவதால் நாளை தடுப்பூசி போடும் பணி நடைபெறாது.

More articles

Latest article