புதுச்சேரி:

வர்னர் கிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் இன்று  2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,கவர்னர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.

புதுவையில் ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு மாநில அரசு பல முறை கண்டனம் தெரிவித்தும், அடங்காக கிரண்பேடியை அடக்க புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணியில் தர்ணா போராட்டத்தில் குதித்தார்.

நேற்று கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு தனது அமைச்சரவை சகாக்களுடன் போராட்டத்தில் குதித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில், நாராயணசாமியின் போராட்டத்துக்கு  இந்திய கம்யூனிஸ்ட் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், முருகன், பெருமாள் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் ஆளுநர் கிரண் பேடியை வெளியேற வலியுறுத்தி அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனிடையே, 21ந்தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வருக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாராயணசாமி நேற்று இரவே பதில் கடிதம் எழுதினார். அதில்,  கடந்த 7-ம் தேதி 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடிதம் கொடுத்தேன். அவை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி பேச்சுவார்த்தைக்குச் செல்ல முதல்வர் நாராயணசாமி மறுத்துவிட்டார்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகையைச் சுற்றி காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு 10 மணி வரையிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் தர்னா தொடர்ந்தது. இன்று 2ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக தமிழகத்தில் இருந்து அதிரடிப்படையினர் உள்பட 5 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  இன்று அதிகாலை  மாளிகையில் இருந்து வெளியே வந்த ஆளுநர் கிரண்பேடி, அதிரடிப்படை காவல்துறையினர் பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு சென்றார். அவர் டில்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

தங்களுடைய போராட்டத்துக்கு பயந்துதான் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியேறி உள்ளார் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மாநில அரசு தர்மயுத்தம் நடத்தி வருவதாகவும், இலவச அரிசி உள்பட 5 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் என்றும் அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக புதுச்சேரியில் பரபரப்பு நிலவி வருகிறது.