ட்டி
நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சுமார் 1900 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா பதிப்பு இல்லாமல் இருந்த மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்திலும் சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்றுவரை இம்மாநிலத்தில் 179 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.   இந்த மாவட்டத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  எனவே அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல கூட்டங்களை ஐ ஏ எஸ்  அதிகாரியும் கொரோனா கண்காணிப்பு அலுவலருமான சுப்ரியா சாகு நடத்தி வருகிறார்.  இந்த கூட்டங்கள் பேரூராட்சி, கிராம ஊராட்சி அளவில் நடைபெற்று வருகிறது.
தற்போது மிகவும் பழமையான தோடா என்னும் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  இதற்குத் தோடா இனத் தலைவர்கள் முன் வந்து முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
இது குறித்து சுப்ரியா சாகு தனது டிவிட்டரில், “இந்த உலகில் தற்போது 1500 தோடா மட்டுமே உள்ளனர்.  இவர்கள் உலகில் எஞ்சியுள்ள மிகப் பழமையான மலைவாழ் மக்கள் ஆவார்கள்.   கொரோனாவால் இவர்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். தோடா இனத் தலைவர்கள் தங்கள் இனத்தைப் பாதுகாக்க முன் வந்துள்ளது நல்லதொரு செயலாகும்” என் தெரிவித்துள்ளார்.