சென்னை:

நாடு முழுவதும் பண்டிகை காலத்தையொட்டி  வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்கிகளில் கடன் பெற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரும்படி பாஜக நிர்வாகிகள் துண்டுபிரசுரம் விநியோகம் செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பணத்தில் இயங்கும், பொதுத்துறை கஷ்டப்படும் பொதுமக்கள், விவசாயிகள், சிறுதொழிலதிபர்கள் போன்றவர்களுக்கு கடன்கள் வழங்கும் என எதிர்பார்த்தால், அதிலும் அரசியல் நுழைந்து விளையாடுகிறது. கஷ்டப்படும்  அப்பாவி மக்களை ஓரங்கட்டி விட்டு, பாஜகவினருக்கு மட்டுமே கடன்கள் வழங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதி செய்யும் விதமாக, குமாரப்பாளையத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்கவேல் என்பவர் துண்டுபிரசுரம் செய்து, பாஜக உறுப்பினர்களை அழைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த துண்டு பிரசுரத்தில், பாரதிய ஜனதா உறுப்பினர் அட்டையுடன் வருபவர்களுக்கு அரசு வங்கிகளில் மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில் ரூ.50ஆயிரம் வரை கடன்கள் பெற்றுத் தரப்படும் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மக்களுக்காக செயல்படும் என நினைத்தால், தற்போது அவைகள் பாஜகவினருக்காக மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி,  சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படும் என்றும்,  இந்த கடன் வழங்கும் திட்டம் பண்டிகை காலங்களில் வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்கள் கைகளிலும் பணம் தயாராக இருக்கும். கடன் வழங்குவதில் அனைத்து நிதிதொடர்பான எச்சரிக்கை விதிகளும், விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பல வங்கிகள் இந்த பண்டிகை கால கடன்களை அறிவித்து உள்ளன. ஆனால், இதை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்கும் வகையில், அந்ந்த பகுதிகளில் உள்ள வங்கி அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.