டில்லி
நிதிப்பற்றாக்குறையை போக்க புதிய நோட்டுக்கள் அச்சடிக்கலாம் என இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பாஜக அரசின் 2019-20 க்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு மானியம், வருமான வரிக் குறைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் காணப்பட்டன. இதன் விளைவாக இந்த வருடம் நிதிப் பற்றாக்குறை உற்பத்தியை விட மேலும் 3.4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அரசு நிறுவனமான நோட்டு அச்சடிப்பு மற்றும் நாணய உருவாக்க ஆணையத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “இந்த ஆணையம் கடந்த கணக்கு வருடத்தில் நல்ல லாபம் ஈட்டி உள்ளது.
ஆணையத்துக்கு நிகர லாபமாக ரூ.630 கோடி கிடைத்துள்ளது. இதில் ரூ.200 கோடி அரசின் பங்காக ஆணையம் அளித்துள்ளது. சென்ற ஆண்டு இறுதி வரை இந்நிறுவனம் 10000 நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் உற்பத்தி செய்து முன்னணியில் உள்ளது.
நிதி நிலை அறிக்கையில் தற்போது பற்றாக்குறை உள்ளது. ஒரு நிதி அமைச்சர் என்னும் முறையில் நான் பற்றாக்குறை அறிக்கையை விரும்பவில்லை.
அமெரிக்காவில் நிதிநிலை பற்றாக்குறையை புதிய நோட்டுக்கள் அச்சடிப்பதன் மூலம் சரி செய்கின்றனர். நாமும் அதே முறையை பின்பற்றலாம்” என குறிப்பிட்டார்.