டில்லி
அரசு விதித்துள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டை எதிர்த்து இன்று பாஜக தலைவர் விஜய் கோயல் ஒற்றைப்படை எண்ணுள்ள வாகனத்தில் சென்றுள்ளார்.
டில்லியில் தற்போது காற்று மாசு மற்றும் புகை ஆகியவை அபாய எல்லையை எட்டி உள்ளது. தற்போதுள்ள நிலையில் டில்லியின் காற்று மக்கள் சுவாசிக்க லாயக்கற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள மாநிலங்களில் தற்போது அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் குப்பைகள் பெருமளவில் எரிக்கப்படுவதால் இந்த மாசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி டில்லி அரசு அண்டை மாநிலங்களில் பயிர்க்குப்பைகள் எரிப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் வாகனத்தில் இருந்து வரும் புகையைக் குறைக்க மீண்டும் ஒற்றைப்படை – இரட்டைப்படை எண் போக்குவரத்து திட்டத்தை அமலாக்கி உள்ளது.
அதன்படி ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்களில் முடியும் வாகனங்களும் இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படையில் முடியும் எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பதாகும் இதை எதிர்த்து நான்கா,ம் தேதியான இன்று பாஜக தலைவர் விஜய் கோயல் தனது வீட்டில் இருந்து ஒற்றைப்படை வாகனத்தில் சென்றுள்ளார்.
இது குறித்து அவர், “இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை என்னும் திட்டம் அரசின் விளையாட்டு வேலையாகும். டில்லி அரசு பயிர்க்குப்பைகளை எரிப்பதால் மாசு உண்டாவதாகத் தெரிவிக்கும் போது இந்த திட்டம் எவ்வாறு மாசு மற்றும் புகையைக் குறைக்கும்?. நான் இந்த விதி மீறலுக்கு அபராதம் அளிக்க தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.