புதுடெல்லி:

நவீன பாடத்திட்டத்துடன் கூடிய முதல் வேதக் கல்வி தொடங்க, தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னாட்சி நிதியுடன் இயங்கும் மகர்ஷி சன்டிபானி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஷ்தான் கவுன்சில், வேதக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வேதத்தையும் நவீன கல்வி முறையில் கற்க தேசிய கல்வி வாரியத்தை தொடங்க ஆரம்ப கட்ட ஒப்புதல் கொடுத்துள்ளது.

மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பிபி. சவுத்ரியும் கலந்து கொண்டார்.
நவீன பாடத்திட்டத்துடன் கூடிய வேதக் கல்வியை தொடங்குவதற்கான வாரியத்தின் சட்ட விதிமுறைகளை ஒரு வாரத்துக்குள் வகுக்குமாறு கவுன்சில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தரமான வேதக் கல்வியை தருவதற்காக, மற்ற கல்வி வாரியங்களைப் போல் பாடத்திட்டம் தயாரிக்க, தேர்வு நடத்த, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கல்வி வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.