வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து போதுமான அளவு மழை இல்லாமல் இருந்த சென்னையில் நேற்று மாலை ஒரு சில மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.
அதேவேளையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெருமளவு அவதிப்பட்டனர்.
இதேபோல் கடந்த ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் அலுவலக நேரத்தை மாற்றியமைக்க கால அட்டவணையை அம்மாநகர காவல்துறை வெளியிட்டது.
கனமழை நேரங்களில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வாகன நெரிசலை குறைக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சூழலில் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற மற்ற பெருநகரங்களில் மேற்கொள்ளப்படும் மாற்று நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
— TN SDMA (@tnsdma) November 30, 2023
அதேபோல் பொதுமக்களும் மழை நேரத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கியிருந்தோ அல்லது அலுவகங்களில் இருந்து சில மணி நேரங்கள் தாமதமாக கிளம்புவது மிகவும் அவசியம் என்று கூறும் ஆர்வலர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மழையில் நனைந்தபடி வாகனங்களில் சாலையில் நிற்பது அவர்களது நேரம் விரயமாவதோடு வாகனங்கள் பழுதடையவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மழைக்கால நோய்கள் பரவவும் வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.
இருந்தபோதும் கடல்மட்டத்தில் இருந்து சில அடி உயரம் மட்டுமே உள்ள சென்னை மாநகரில் இதுபோன்று திடீரென கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்படும் வெள்ள நீரை உடனுக்குடன் வெளியேற்ற டிராக்டர்கள் மூலம் தற்காலிகமாக மோட்டார்களை வைத்து நீரை வெளியேற்றுவதற்கு பதிலாக தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் தவிர புறநகர் பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்புகளில் நிரந்தர மின்மோட்டார் பம்பிம் ஸ்டேஷன்கள் அமைத்து தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
வாகன நெரிசல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீடு திரும்ப நேர அட்டவணை வெளியிட்டது ஹைதராபாத் காவல்துறை