சென்னை

காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துச் சுடுகாடுகளிலும் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பல சுடுகாடுகளில் இறந்தவர்களின் சடலம் விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது.  இதற்கு சுமாராக 500 கிலோ விறகுகள் தேவைப்படுகிறது.   மேலும் இவ்வாறு விறகுகள் மூலம் தகனம் செய்யும்போது நாடெங்கும் சுமார் 80 லட்சம் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகி காற்றில் கடும் மாசு உண்டாகிறது.

மேலும் விறகுகள் மூலம் தகனம் செய்யும் போது உறவினர்கள் அஸ்தியைப் பெரற 12-16 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.   இதோடு ஒப்பிடும் போது மின்சார தகன மேடைகளில் 4 மணி நேரத்தில் அஸ்தி கிடைத்து விடுகிறது.   ஆனால் மின் தகன மேடைகளில் எரியூட்டுவதில் பலர் விருப்பம் தெரிவிப்பது இல்லை.   முன்கூட்டியே சூடேற்ற வேண்டிய நிலையும் உள்ளது.

எனவே சென்னை மாநகராட்சி அனைத்து சுடுகாடுகளிலும் எரிவாயு தகன மேடை  அமைக்க திட்ட்மிட்டுளதாக அறிவித்துள்ளது.  சுமார் ரூ.8.35 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த எரிவாயு தகன மேடைகள் தமிழக உள்ளூர் நிதிஉதவி மற்றும் கட்டமைப்பு மேம்பாடு ஆணையம் மூலம் அமைக்கப்பட உள்ளன.

எரிவாயு தகன மேடையில் உடனடியாக 500 முதல் 1000 டிகிரி வெப்பம் கிடைப்பதால் வெகு விரையில் தகனம் நடைபெறுகிறது.   தவிர இதன் மூலம் காற்று மாசு வெகுவாக குறைகிறது.   தவிர ஒரு சிலிண்டர் எரிவாயு மூலம் 100 கிலோ எடையுள்ள ஒரு சடலத்தை எரிக்க முடியும் என்பதால் இதற்கு அதிக செலவும் இருக்காது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.