சென்னை: டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம் குளறுபடிக்கு காரணம்  என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதுபோல டிஎன்பிஎஸ்சியின் குளறுபடி காரணமாக, 55,000 தேர்வர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று நடைபெற்ற  டி.என்.பி.எஸ்.சி தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வை நடத்துவதில் ஏராளமான ‘குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. மேலும் பிற்பகல் தேர்வையும் அரைமணி நேரம் தாமதமாக தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வை ரத்து செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஏராளமான குளறுபடி; டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த குளறுபடிக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே காரணமா என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாவ அவர்   வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  ’’தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத் தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இந்தக் குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்.

பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத் தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப் பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.

போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சம வாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.

சம வாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சம நீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இந்தத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்த வேண்டும்’’.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுபோல டடிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.