சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15)  குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என  டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர்  தெரிவித்து உள்ளார்.

இன்று நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர், “சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி மூலமாக கடந்த ஆண்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர் தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு பணிகளை டி.என்.பி.எஸ்.சி மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 200 முதல் 300 தேர்வர்கள் இருப்பார்கள்.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இரண்டு மாதத்திற்குள்ளாக வெளியிடப்படும். அதில் இருந்து மூன்று மாதத்திற்குள் மெயின் தேர்வு நடைபெறும்.

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், பாடத்திட்டங்களை மேம்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்த வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாணவர்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபடுவது கிடையாது. ஒவ்வொரு தேர்வும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வகையில் திட்டமிடுகிறோம். தேர்வு எழுதுவதற்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது என்று பெரிய அளவில் யாரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. கூடுமானவரை அனைத்து தேர்வு மையங்களையும், எளிதாக சென்றடையக் கூடிய இடங்களில் வைப்பதற்கு முயற்சி செய்கிறோம்” .

இவ்வாறு கூறினார்.