சென்னை

5 வருடங்களுக்கு எம்.பி.ஏ படிப்பை தொலைநிலையில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்தியத் தொழில்நுட்ப மாமன்றம் (எ.ஐ.சி.டி.இ) முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்தத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கு ஐந்து வருடத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்தியில்,

”அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றத்துக்குத் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) படிப்பைத் தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

மே 29ஆம் தேதி அன்று இந்த கோரிக்கையின்படி அகில இந்தியத் தொழில்நுட்ப மாமன்றம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளர்கள் மற்றும் பல்கலையின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் மாமன்றம் அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக இருப்பதை உறுதி செய்தது.  எனவே முதுநிலை வணிக நிர்வாக பட்டப்படிப்பைத் தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த 2023-2024 முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.”

என அவர் தெரிவித்துள்ளார்.