சென்னை

நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரையும் விளக்கை அணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார், மின்சாரத் தேவை திடீரென குறையும் போது கிரிட் களில் அலைவரிசையில் மாறுதல் உண்டாகும்.   அவ்வாறு ஆகும் போது முழு மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தமிழக மின் வாரியம் அளித்துள்ள அறிக்கையில், “வரும் 5 ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு மின் தேவை திடீரென குறையவும் 9.09 மணிக்கு திடீரென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இதனால் முழு மின்வெட்டு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே அனைத்து மின்சார பொறியாளர்களும் தங்கள் தலைமையகங்களில் தேவையான அளவு ஊழியர்களுடன் அன்று இரவு 10 மணி முதல் 10.30 வரை தயாரான நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து கெப்பாசிட்டர்களும் பணிக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சரியான வோல்டேஜ் கிடைக்க ஏதுவாக டாப் சேஞ்சர்களை பயன்படுத்த வேண்டும்.” போன்ற அறிவுரைகளை ஊழியர்களுக்கு அளித்துள்ளது.

மேலும் நாளை இரவு 9 மணியில் இருந்து 9.09வரை விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் எனவும், ஏசி மற்றும் ஃபிர்ட்ஜ் உள்ளிட்ட எதையும் அணைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.  அவ்வாறு அணைத்தால் முழு மின்வெட்டு உண்டாக வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.