சென்னை: பொறியியல் படிப்புக்கான 2வது சுற்று கலந்தாய்வு நாளை (25ந்தேதி) தொடங்குகிறது.  முதல்சுற்றில் தேர்வான 10,351 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்ட நிலையில், 9,292 மாணவர்கள் மட்டுமே தங்களது  சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். இதை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன.  இதற்சகான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம்  20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில் 668 பேருக்கு இடங்கள்  ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 12,294 மாணவர்கள் பங்கேற்றதில் 10,351 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டன. அதில் 9,292 மாணவர்கள் மட்டுமே தங்களது  சேர்க்கையை உறுதி செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  காலியிடங்கள் ஏற்படுவதை தவிர்க்க கலந்தாய்வில் பங்குபெற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கை உறுதி செய்தவுடன், அதற்கான கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதம் பெற்றதும் மாணவர்கள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, முதல்சுற்று கலந்தாய்வில்,  10,351 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 9,292 பேர் கல்விக் கட்டணம் செலுத்தி தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளனர்.

மீதமுள்ள 1,059 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை. இதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 405 மாணவர்களில் 306 பேர் மட்டுமே சேர்க்கையை கட்டணம் செலுத்தி உறுதி செய்துள்ளனர். மற்ற 99 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை.

இதன்மூலம் நிரம்பாமல் இருந்த 1,158 இடங்கள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டு முன்னேற்ற வாய்ப்பு கோரியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதில் நிரம்பியவை போக மீதமுள்ள இடங்கள் 2-ம் சுற்று கலந்தாய்வில் சோ்க்கப்படும். தொடர்ந்து 2-ம் சுற்று கலந்தாய்வு நாளை (செப். 25) தொடங்கி நடைபெற உள்ளது.