பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முகிலன்.  இவர் நேற்று தனது பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.  அப்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தியேட்டருக்கு அருகில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், முகிலன் வந்த பைக்கை தடுத்து நிறுத்தினர்.  உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் போலீஸார் பைக்கை பறிமுதல் செய்து அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்தியுள்ளனர்.
அதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றிக் கொண்டார்.  கையில் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு போலீஸார் இருந்த பகுதியில் வந்து தன்னைத்தானே கொளுத்திக் கொண்டார்.  தீ மளமளவெனப் பரவியதால், நடுரோட்டிலேயே அங்கும் இங்குமாக அலறி அடித்தபடி ஓடியுள்ளார்.  பொதுமக்கள் அவர் மீது போர்வையைப் போர்த்தி தீயை அணைத்தனர்.  தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீக்காயம் 90 சதவிகிதம் வரை ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வேலூர் சரக டிஐஜி காமினி, திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் ஆம்பூருக்கு விரைந்தனர்.
பலத்த தீக்காயமடைந்த அந்த இளைஞரின் குமுறலைச் சுற்றியிருந்த பலர் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்தனர்.  அதில், “என் சாவுக்கு போலீஸ்தான் காரணம். சும்மா போறவனை பிடிச்சாங்க. அதான் கொளுத்திக்கிட்டேன்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார் அந்த இளைஞர்.
சம்பவம் குறித்து திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் கூறும்போது, “தீக்குளித்த இளைஞர் வந்து செல்லும் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.  சம்பவ இடத்தில் 5 போலீஸார் இருந்துள்ளனர். போலீஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அட்ரஸும் கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னரே பக்கத்தில் உள்ள வீட்டுக்குப் போய் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வந்து தீக்குளித்திருக்கிறார். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அந்த இளைஞரே தான் மது போதையில் இருப்பதாகக் கூறியுள்ளார். சிஎம்சி மருத்துவர்களும் அதை உறுதி செய்துள்ளனர்.  முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல்தான் கிடைத்திருக்கிறது. வேறு எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
தீக்குளித்த இளைஞர் முகிலனுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.  தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அவரது இந்த விபரீத முடிவு அனைவரையும் பதற வைத்திருக்கிறது.
– லெட்சுமி பிரியா