சென்னை

க்ரைன் மாணவர்கள் கல்வி குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலைத் தமிழக அரசு செயல்படுத்தும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.   இவர்கள் அனைவரும் மருத்துவப்படிப்புக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்றவர்கள் ஆவார்கள்.   இதில் ஏராளமான தமிழக மாணவர்கள் உள்ளனர்.  அவர்கள் சமீபத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து தங்கள் கல்வியைத் தொடர உதவி கோரினர்.

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறினார்.   தமிழக அரசு உக்ரைன் மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் தமிழக சுகாதார அமைச்சர் சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்றார்.  பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அமைச்சர்,

“தற்போது தமிழகத்தில் கொரோனா மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. மொத்தம் 495 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த வாரம் நடந்த 23-வது மெகா முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டது வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்கள் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று தடுப்பூசி போடாமல் உள்ளனர். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

உக்ரைன் நாட்டில் இருந்து வந்துள்ள தமிழக மாணவர்களின் கல்வி குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு செயல்படுத்தும்.  மேலும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கத் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சிக்கல் காரணமாக இப்பணி தாமதம் ஆகியுள்ளது. அவர்களின் விவரங்கள் விரைவில் சேகரிக்கப்படும்.” 

எனத் தெரிவித்துள்ளார்.