சென்னை:
தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளைக்குள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கோரி உள்ளது.
அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்ட காவல அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளைக்குள் (31ந்தேதிக்குள்) விண்ணப்பிக்க வேண்டும் என்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஜெ.முதல்வராக இருந்தபோது வேலைக்கு போகும் பெண்களின் வசதிக்காக மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டதால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெ. பிறந்தநாள் அன்று, பிரதமர் மோடியை வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வேலைக்கு போகும் பெண்கள் தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற வியாழக்கிழமைக்குள் (ஜன. 31) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்கீழ், 2017-18-ஆம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 7,225 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜனவரி 21-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (ஜனவரி 31) மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு, விரைவுத் தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
[youtube-feed feed=1]