சென்னை: எதிர்க்கட்சிகளின் போராட்டத்துகு அனுமதி மறுக்கும் காவல்துறை,  ஆளும் கட்சி போராட்டத்துக்கு  மட்டும் அனுமதி கொடுப்பது எப்படி?  என கேள்வி எழுப்பி உள்ளதுடன்,  காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை குறித்து உயர்நீதி மன்றத்தில் பாமக வழக்கறிஞர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், திமு கஅரசை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு தமிழ்நாடு காவல்முறை மறுத்து வருகிறது. இதனால், தடையைமீறி  ஒவ்வொருமுறையும் எதிர்க்கட்சியினரின் போராட்டம் நடத்துவதும், அப்போது கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமூள்ளு ஏற்பட்டு, பின்னர் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால், இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு ஒரே இரவில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. காவல்துறையின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்களை எழுப்பிஉள்ளது.

இந்த நிலையில்,   எங்களது போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், திமுக போராட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தது, என உயர்நீதிமன்றத்தில் பாமக சார்பில் முறையிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாமக நடத்திய போராட்டத்துக்கு  முன்கூட்டியே அனுமதி கோரிய நிலையில், அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதுபோல பாஜகவினர் போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.  இதற்கிடையில்,  பாமக போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.