சாத்தூர்

மிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தம்மை தர்க்குறைவாக பேசியதாக விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் உரிமை தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அறிஞர் அண்ணாவின் 111 ஆம் நாள் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூரைப் பற்றி மிகவும் தரக்குறைவாகவும்  வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி சாத்தூர் நகரக் காவல் துறையினரிடம் மாணிக்கம் தாகூர் சார்பில் அளிக்கபட்ட புகாரில், “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும், பொதுமக்கள் நலனையும் பேணிக்காப்பேன் என்று உறுதிமொழியேற்று அமைச்சர் பொறுப்பேற்ற கே.டி.ராஜேந்திர பாலாஜி, பொதுக் கூட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரைத் தகாத வார்த்தையாலும், அவர் ஓட்டுக் கேட்டுவந்தால் தாக்குங்கள் எனக் கூறி உள்ளார்.

அதுமட்டுமின்றி மாணிக்கம் தாகூரை நன்றிகெட்டவர் என்றும், ரப்பர் குண்டை வைத்து அவருடைய வயிற்றில் துப்பாக்கியால் சுடுங்கள் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதோடு, பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரைக் கொலை செய்யத் தூண்டியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புகார் மீது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதையொட்டி மாணிக்கம் தாகுர் தமது புகாரின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்களவை உரிமைக் குழுவிடம் அமைச்சர் மீது உரிமை தீர்மானம் ஒன்றை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காவல்துறைத் தலைவர் திரிபாதியைச் சந்தித்துப் பேச நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.