சென்னை
தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புக்கள் மற்றும் மலர்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் இதே போல் வரவேற்பு அளித்துள்ளனர்.
அவ்வகையில் நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியுடன் சென்று மாணவர்களை வரவேற்றுள்ளார். அமைச்சர் செய்தியாளர்களிடம், “இந்த அரசு மாணவர்களை காக்க அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் உடனடியாக பாடங்களை நடத்த வேண்டாம். மாறாக மாணவர்கள் மகிழ்ச்சியாக ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சுழலை உருவாக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்கள் உற்சாகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இது என்றும் நீடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]