மயிலாடுதுறை:
கூகுள் மேப் தனது குடும்பத்தை பிரிப்பதாக கூகிள் நிறுவனம் மீது மயிலாடுதுறையை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சந்திரசேகர் மயிலாடுதுறையில் ஃபேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவர் மனைவிக்கும் சமீப நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குக் கூகுள் மேப்தான் காரணம் எனக் கூறி, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சந்திரசேகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “கூகுள் மேப் நான் செல்லாத இடத்திற்கு எல்லாம் சென்றதாகத் தெரிவிக்கிறது. இந்த தகவல்களை என் மனைவி தினமும் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் விடப் பெரிதாகக் கூகுளை மட்டும் நம்பி என்னைச் சந்தேகப்படுகிறாள். உறவினர், பிள்ளைகள் என யார் பேச்சையும் என் மனைவி நம்புவதில்லை” எனக் கூறியுள்ளார்.
குறிப்பாகக் கடந்த மே 20ஆம் தேதி தான் செல்லாத இடத்திற்குச் சென்றதாகக் கூகுள் மேப் தெரிவித்துள்ளது. இந்த தகவலால் தனது குடும்பமே இப்போது சிதைந்துவிட்டதாகவும் சந்திரசேகர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவை வைத்து மயிலாடுதுறை போலீஸ் எப்.ஐ.ஆர் எதுவும் பதியவில்லை. கணவன் மனைவியை அழைத்து முதலில் கவுன்சிலிங் வழங்கலாம், பின் ஒத்துவரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்போது முடிவெடுப்போம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.