சென்னை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக ஊராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் 378 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். இதில் முதல் இரண்டு நாள்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,840 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,091 பேரும் வேட்புமனு அளித்துள்ளனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.