தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது.
இதனால் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கிராமங்களில் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தவிர, ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மோசமான நிலையில் இருந்த பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பலஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
50 செ.மீ.க்கும் மேல் மழை கொட்டி தீர்த்த நிலையில் இந்த புயல் தற்போது தமிழகத்தின் வட உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதை அடுத்து மேலும் சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழங்களின் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.