சென்னை

மிழக கோவில்களுக்கு சொந்தமான ரூ. 127 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது.

தமிழக கோவில்கள் அரசின் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளை நிலம், கட்டிடங்கள், கடைகள் போன்றவை உள்ளன. இவைகளில் பல இடங்கள் வெளி ஆட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை மீட்கும் நடவடிக்கையில் இந்து அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.

சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் இந்து அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கீடு மற்றும் துறையின் பணிகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் போது, “தமிழகத்தில் உள்ள 146 கோவில்களுக்குச் சொந்தமான 547.66 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத் தவிர பல கட்டிடங்கள் மற்றும் கடைகளும் மீட்கப்பட்டுள்ளன.” என அரசால் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இந்து அறநிலையத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 1005 கோவில்களுக்குச் சொந்தமான 6582 ஏக்கர் நிலங்கள் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. அதை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அவ்வகையில் சென்ற வருடம் 276.31 ஏக்கர் நிலங்கள் மற்றும் 33.25 மனைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.127.42 கோடி ஆகும்” என தெரிவித்துள்ளார்.