சென்னை
வரும் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை பரவல் தொடங்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் உள்ளது. பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் அலை பரவல் தொடங்கியது. இரு அலைகளிலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாகக் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று 36,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்த தீவிர ஊரடங்கால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் எல்லையோர மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 1,200க்கும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், “இந்த அண்டு செப்டம்பர், அக்டோபரில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அது தொடங்கவில்லை. தீபாவளி பண்டிகை வருவதால் அப்போது தொடங்கலாம் என ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.. இதை தடுக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் அலை தொடங்க வாய்ப்பு குறைவாக உள்ளன.
ஆனால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மூன்றாம் அலை தொடங்க அதிக வாய்ப்புள்ளது. சுமார் 70% மக்களுக்கு குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போட்டால் 3 ஆம் அலை பாதிப்பைக் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் அது எட்டி விட வாய்ப்புள்ளது. எனவே அதிக பாதிப்பு இருக்காது என்பதால் மக்கள் அச்சமடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.