சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள, வறுமைக்கோட்டுக்கு கீழ வாழும் பொதுமக்களுக்கு ரூ.2000 நிதி உதவி அளிக்கப்படும் திட்டத்திற்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை ஊழியர்களை ஈடுபடுத்தி வருகிறது.
இதற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சுகாதாரத்துறையின் காசநோய் பிரிவு ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் காசநோய் ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசும், மாநிலஅரசும் இணைந்து செயல்பட்டுவருகின்றன. இந்த துறையை சேர்ந்த ஊழியர் சங்கங்களின் செய்தியாளர் சந்திப்பு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறைப் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், “தேசிய சுகாதார இயக்கத்தின் சார்பில் காசநோய் ஒழிப்பு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக நாடு முழுவதும் 72,000 க்கும் அதிகமான பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திலிருந்து மட்டும் 1500-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். காச நோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் இந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தையும் மிகக் குறை வாகவே வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் செயல்பட்டு வந்த இரத்த சோதனை நிலையங்களை எல்லாம் வட்டார அளவில் மட்டும் செயல்படக் கூடியதாக மாற்றி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இதனால் 20,000 க்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வை இழக்கும் நிலையில் உள்ளனர்.
மாநிலத்தில் சில இடங்களில் காச நோய் ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன், 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கிவிட வேண்டுமென்ற ஒரே நோக்கிலேயே, காசநோய் ஒழிப்புத் தொழிலாளர்களை இந்தப் பணியில் அரசு ஈடுபடுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதன் காரணமாக மருத்துவ பணிகள் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.