சென்னை

மிழக அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

மத்திய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்த சட்டங்களை மாநில அரசுடன் ஆலோசனை நடத்தாமலும் கருத்துக்களைக் கேட்காமலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு இது குறித்து எழுதி உள்ள கடிதத்தில்,

”இந்த மூன்று சட்டங்களும் போதிய ஆலோசனைகள் இன்றி அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் கொண்டு வர மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படாமல், எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. 3 சட்டங்களும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன, இது இந்திய அரசியலமைப்பின் 348 வது பிரிவை மீறுவதாகும்.

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். கூடுதலாக, இந்த சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 103, இரண்டு வெவ்வேறு வகை கொலைகளுக்கு இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரே தண்டனையைக் கொண்டுள்ளது. BNSS மற்றும் BNSஇல் தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடான இன்னும் சில விதிகள் உள்ளன.

இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படும். நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை மற்றும் தடயவியல் போன்ற பங்குதாரர் துறைகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் பிற தொழில்நுட்பத் தேவைகளுக்கு போதுமான ஆதாரங்களும் நேரமும் தேவை.

அவசரமாகச் செய்ய முடியாத பங்குதாரர் துறைகளுடன் கலந்தாலோசித்து, புதிய விதிகளை உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள படிவங்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதும் அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு புதிய சட்டங்களை மதிப்பாய்வு செய்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.