சென்னை
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு அடைந்தது. குறிப்பாகத் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அவதியுற்றனர்.
இதையொட்டி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை அரசு தொடங்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று இந்த மருந்தை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் போலி ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் தேவை குறைந்துள்ளது. எனவே இதையொட்டி மருத்துவ கல்லூரிகளில் ரெம்டெசிவிர் விற்பனை வரும் 17 ஆம் தேதி வரை மட்டுமே நடக்கும் எனவும் அதன் பிறகு நிறுத்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.