சென்னை
சென்னை நகர் அருகே இரண்டாவது விமான நிலையத்தை பசுமை விமான நிலையமாக அமைக்க ஆலோசகரை அரசு நியமிக்க உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு விஷன் 2023 என்னும் ஆவணத்தை வெளியிட்டார். அந்த ஆவணத்தில் ஆண்டுக்கு 4 கோடி பேர் வந்து போகும் அளவுக்கு ஒரு பசுமை விமான நிலையம் சென்னை நகருக்கு அருகில் ரூ.20000 கோடி செலவில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். அப்போது அந்த இரண்டாம் விமான நிலையம் சென்னைக்கு மேற்கே 40 கிமீ தூரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4800 ஏக்கரில் அமைக்கப்படும் என கூறப்பட்டது.
அதை ஒட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் இடத்தை அடையாளம் காட்டுவது குறித்து பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தின. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 15 முதல் 20 சதவிகிதம் அதிகரித்து வ்ருவதால் 7 அல்லது 8 ஆண்டுகளுக்குள் புதிய பசுமை விமான நிலையம் அமைப்பது அவசியமாகும் என இந்த பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டாம் பசுமை விமான நிலையம் அமைக்க நிர்வாக பொறுப்பை தமிழக தொழில் வளர்ச்சி ஆணையத்துக்கு (டிட்கோ) அரசு அளித்துள்ளது. அத்துடன் இந்த புடிய விமானம் அமைக்கும் இடம், நிலத் தேவைகள், தொழில்நுட்ப தேவைகள், கட்டுமான அமைப்புக்கள், நிதி விவரங்கள், டெண்டர் விவகாரங்களுக்காக ஆலோசகரை நியமிக்க வேண்டும் என அரசு டிட்கோவிடம் தெரிவித்துள்ளது.
அதை ஒட்டி அரசு சார்பில் டிட்கோ ஆலோசகரை நியமிக்க உள்ளது. இந்த ஆலோசகர் மேலே குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் நியமனத்துக்கு பிறகு மேற்கொள்வார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.