சென்னை: அக்டோபர் 1 முதல் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப் பரவலின் தன்மையைக் கருத்தில் கொண்டும், இந்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் கூறி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் அக்.1 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறிய மட்டும் அனுமதித்து செப்.24 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளைக் கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்துக் கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப் பரவலின் தன்மையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்புக் கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது.
இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.