சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? எந்த வயதில் சேர்க்கலாம்? என்பது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு, மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ பள்ளிகளில் இப்போது பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுபோல தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளிலும் 12ம் வகுப்புக்காக செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மார்ச், ஏப்ரலில் மற்ற வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. பின்னர் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்கும். அப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், பல தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கைக்கள் தொடங்கி உள்ளது. பிரபலமான தனியார் பள்ளிகளில் இப்போதே விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கி கல்லா கட்டும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, அரசு பள்ளிகளில், வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கிடைக்கும் கற்றல் வாய்ப்புகள், நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள், கல்வித்தரம் உள்ளிட்டவற்றை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், அங்கன்வாடியில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையில்லாமல், வேறு பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், 1-ம் வகுப்பு மற்றும் இதர வகுப்புகளில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அதற்கான இடங்கலை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எந்த வயதில் அரசு பள்ளியில் சேர்க்கலாம்?
தமிழகத்தில் 5 பூர்த்தி அடைந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கலாம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் 2025-26 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கும்.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மதிய சத்துணவு திட்டம், புதுமை பெண் கல்வி உதவித்தொகை திட்டம், தமிழ் புதல்வன் கல்வி உதவித்தொகை திட்டம், திறனாய்வு கல்வி உதவித்தொகைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பு வகுப்புகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆன்லைன் திறன் மேம்பாட்டு வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]