சென்னை: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், நவம்பர் 1ந்தேதி முதல் தியேட்டர்கள், மால்கள், கடைகள் தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. தற்போது தீபாவளியையொட்டி, சென்னை, மதுரை, கோவை உள்பட பல நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கந்த சஷ்டி காலம் நவம்பர் 4ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியானது முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறுவது பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வுகளை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் செந்தூர் வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்களும், பக்தர்களும் திருவிழாக்களில் பங்குகொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால், தமிழகஅரசு அதற்கு தடைவிதித்துள்ளது.
திருச்செந்தூரில் நடைபெற உள்ள கந்தசஷ்டி திருவிழா மற்றும் அதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 7-ம் நாளாள 10-ந் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2 நாட்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆண்டு பக்தர்கள் கோவில் மற்றும் வளாக பகுதிகளில் தங்க அனுமதி கிடையாது. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்கவும் அனுமதி கிடையாது.
பொதுவாக திருவிழாக் காலங்களில், பொதுமக்களை நம்பி ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் திருச்செந்தூரில் சாலையோர கடைகளை அமைத்து வணிகம் செய்து வயிற்று பிழைப்பு நடத்துவார்கள். தற்போது தமிழகஅரசு தடை விதித்துள்ளதால், சாலையோர வியாபாரிகளின் வயிற்றில் அடித்துவிட்டதாக குமுறுகின்றனர்.
மேலும், சூரசம்ஹாரத்தையும், திருக்கல்யாணத்தையும் கண்ணால் நேரடியாக கண்டுகளிக்க எண்ணிய பக்தர்களுக்கும், அரசின் தடை கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் குளுகு ஏசியுடன் 100 சதவிகித இருக்கையுடன் திரைப்படத்தை ஓட்ட அனுமதிஅளித்துள்ளதுடன், மால்களிலும், பெரும் கடைகளையும் முழுமை யாக திறந்து, வியாபாரத்தை நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதித்து, சிறு வணிகர்களினின் வயிற்று பிழைப்பை தடுத்துள்ளதுடன், பக்தர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் தினசரி லட்சக்கணக்கானோர் பெரிய பெரிய கடைகளில் குவிந்து வரும் நிலையில், அதை கண்டுகொள்ளாத தமிழக அரசு, அப்பாவி ஏழைகள் வயிற்று பிழைப்புக்காக திருவிழா நடைபெறும் போடும் சாலையோர கடைகளை முடக்கும் வகையில், தடை விதித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தடை காரணமாக, வணிகர்களும், பக்தர்களை நம்பி திருச்செந்தூரில் உள்ள ஏராளமான விடுதிகளும், உணவகங்களும், நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களும், ஆள் அரவமின்றி, பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டாவது, கந்த சஷ்டி விழாவின்மூலம், வருமானத்தை பார்க்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில், தமிழக அரசின் தடை, அவர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளதுடன் வணிகர்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
ஏசி அறைக்குள் பரவாத கொரோனா தொற்று, வீதியில் நடைபெறும் விழாவிலா பரவப்போகிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை சற்று தீவிரப்படுத்துவதற்கு பதிலாக ஒரேயடியாக தடை போடுவது மக்கள் நல அரசுக்கு அழகல்ல…