சென்னை
கிராமப்புறங்களில் அனைத்து பருவ மாறுதல்களையும் தாங்கும் சாலைகள் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி உள்ளது.
பொதுவாக கிராமப்புறங்களில் இருந்து பிரதான சாலை செல்ல அமைக்கப்படும் சாலைகள் அடிக்கடி பழுதடைகின்றன. இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாறுதல்கள் ஆகும். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகள் பழுதடைவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் பல கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இந்த குறையைப் போக்கத் தமிழக அரசு ஒரு திட்டம் திட்டி உள்ளது.
அந்தத் திட்டத்தின்படி அனைத்து பருவ மாறுதல்களையும் தாங்கக் கூடிய அளவுக்கு 300 கிமீ தூரத்துக்குச் சாலைகள் இந்த கணக்கு ஆண்டில் அமைக்கப்பட உள்ளது. பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம முன்னேற்ற இயக்ககம் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைப்பை நடத்த உள்ளது. இதற்கு 22 கோடி மனித தினம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.
இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைத்து கிராமப்புற சாலைகளும் பருவ மாறுதல்களைத் தாங்கும் வகையிலான கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே அவ்வாறு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் இந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒரு கிமீக்கு ரூ.29.40 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்துக்கு ஆகும் செலவுகளில் 75% மத்திய அரசு அளிக்க உள்ளது. மீதமுள்ள செலவுகளை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.