சென்னை:
தமிழக மீன் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படும் பல மீன்கள், ரசாயன ஊசி போடப்பட்டு விற்பனை செய்யப்படுவதும், கெட்டுப்போன மீன்கள் ஐஸ்கட்டியில் வைத்து மீண்டும் விற்பனை செய்யப்படுவதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக பல டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மீன் சந்தைகளில் மீன்களின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு விற்கப்பட்ட மீன்களில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் தரம் குறைவாகவும், கெட்டு போன நிலையில் இருந்து கண்டறியப்பட்டது. இத்தகைய கெட்டுப்போன மீன்கள் இரண்டு டன் அளவில் உணவு பாதுகாப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மீன்களின் தரத்தினை உறுதி செய்திடவும் தரம் குறைவான மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மாநிலம் முழுவதும் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீன் வளத்துறை இயக்குனரால் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் மற்றும் மீன் பொருட்களின் தரத்தினை தொடர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.