சென்னை
முன்னாள் துணை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
அருப்புக் கோட்டையில் உள்ள கலைக்கல்லூரியில் துணை பேராசிரியையாக நிர்மலா தேவி பணி புரிந்து வந்தார். நிர்மலா தேவி மாணவிகளுக்கு பணம், மதிப்பெண் உள்ளிட்ட ஆசைகளைக் காட்டி ”மேலிடத்துக்கு” பாலியல் உதவி புரிய கோரியதாக ஒரு தொலைபேசி அழைப்பின் பதிவு வெளியாகியது. அதை ஒட்டி அவர் மாணவிகளை தவறான வழியில் நடத்த முற்பட்டதாக புகார்கள் எழுந்தன
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு தொடரப்பட்ட வழக்கில் சிபிஐக்கு மாற்ற முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் அளிக்குமாறு நிர்மலா தேவி அளித்த மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நிர்மலா தேவி சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இது குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு அளித்த பதில் மனுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளதாகவும் அரசு தரப்பில் எவ்வித தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிர்மலா தேவி ஜாமீனில் விடப்பட்டால் அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட வாய்புல்ளதா என உயர்நீதிமன்றம் அரசு மற்றும் நிர்மலா தேவியின் வழக்கறிஞர்களிடம் கேட்டதற்கு அவருக்கு உயிர் அபாயம் கிடையாது என பதில் அளித்தனர். இது குறித்து சிபி சிஐடியின் பதிலை வரும் 11 ஆம் தேதி அளிக்குமாறு உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. அதுவரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.