சென்னை
உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது அபாயத்தில் உள்ளனர். அவர்களை மீட்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ரஷ்ய ராணுவ தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாகி உள்ளன. எனவே விமானப் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து , பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானத்தை அனுப்பிச் சிக்கியவர்களை அழைத்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உக்ரைனில் சிக்கி உள்ள தமிழ் மாணவர்களை மீட்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, கலாநிதி வீராச்சாமி, எம் எம். அப்துலா மற்றும் சட்டசபை உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து, பெலாரஸ், உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மாணவர்களை மீட்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு தமிழக அரசு சார்பில் மாணவர்களை மீட்க பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.