காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கழிவறைக்கு அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சண்முகம். இவரது இளைய மகள் சரண்யா. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தின் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்து வருவார். இவர் இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில், மாற்றுத் திறனாளியான இவர் கழிவறைக்கு அருகிலுள்ள வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் முறையாக கட்டி முடிக்கப்படாத அந்த கழிவறையின் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் இன்று 3 மணியளவில் தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் அவரைத் தேடியபோது அவரது காலனி கருவறையின் முன்பு இருந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள செப்டிக் டேங்க்கில் தேடியபோது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்ட பொதுமக்கள் முதலுதவி அளித்து காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடுகள் தோறும் கழிவறைத் திட்டம் என அரசு கூறிவரும் நிலையில், அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களில் கழிவறை இல்லாததால் பெண் ஊழியர்கள் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்று குரல்கள் எழுப்பியும் செவிசாய்க்காததால் இன்று மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியரின் மரணம் நிகழ்ந்துள்ளது.