சென்னை
தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் தற்போதைய கொரோனா பரவல், பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கபட உள்ளது.
- ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்
- ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலங்களில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
- மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 1 முதல் மாணவர்கள் தங்கள் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
- விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை.
- தனி நபர்களுக்கு மட்டும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மரியன்னை பிறந்த நாளை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கபட்டுள்ளது.